05/06/2020
இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த 2020 ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தின கருப்பொருளாக பல்லுயிர் பெருக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கு செயற்கையாக வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழும் இடங்களை செயற்கையாக உருவாக்க முடியாது. மனிதனும் இயற்கையும் நிலைத்திருப்பதற்கு பல்லுயிர் பெருக்கம் அவசியம். பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது மனிதர்களாகிய நமது கடமை. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்து சுற்றுச் சூழல் மாசினால் ஏற்படும் தீங்குகளை புரிய வைக்கவேண்டும். மேலும் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்த்தல், நீர், நில, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற சமூக பொறுப்புகளையும் கற்றுத்தர வேண்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்றார் வள்ளலார். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு தூய்மையான சுற்றுச்சூழல் மிக முக்கியம். அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியை சுற்றுச் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும். நல்ல காற்று, சுத்தமான நீர், நஞ்சில்லா மண் இவைதான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டிய சொத்துக்கள்.
கரம் கோர்ப்போம்... சுற்றுச்சூழல் காப்போம்..!